அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம் தமிழக அரசு அறிவுரை
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம் என தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.;
சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர சில அறிவுரைகளையும் மக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ற தலைப்பில், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டியவை என்ற தலைப்பில், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம், மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.