ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தும் முடிவு எடுக்கவில்லை ராமமோகனராவ் ஆணையத்தில் வாக்குமூலம்

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-10-24 22:45 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், அப்பல்லோ மருத்துவமனையின் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.

விசாரணையின் போது ராமமோகனராவ், ‘ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக அந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அறிக்கைகள் அனைத்தும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமே வெளியிட்டது’ என்று வாக்குமூலம் அளித்தார்.

மேலும் 4 மாதம் கால அவகாசம்

அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ‘ஜெயலலிதா முக்கிய பிரமுகர் என்பதால் அவருக்கு இருந்த நோயின் உண்மைதன்மை குறித்து அறிக்கை வெளியிடப்படவில்லை’ என்று சாட்சியம் அளித்துள்ளார்.

அவர்கள் இருவரிடமும் ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன், சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை முடிவடையாத நிலையில் அக்டோபர் 24-ந் தேதி(நேற்று) வரை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஆணையத்துக்கு கால அவகாசம் அளித்து இருந்தது.

தற்போது வரை விசாரணை முடிவடையாததால் மேலும் 4 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்