கைதிகள் சொகுசு வாழ்க்கை விவகாரம்: புழல் சிறை சூப்பிரண்டு இடமாற்றம்
கைதிகள் சொகுசு வாழ்க்கை விவகாரத்தையொட்டி சென்னை புழல் சிறைக்கு புதிய சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
சென்னை புழல் சிறையில் கைதிகள் சிலர், சிறை விதிகளுக்கு புறம்பாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதுகுறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து சிறைக்குள் போலீசார் அதிரடி சோதனை நடத்தி டி.வி., செல்போன் போன்ற பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். குறிப்பிட்ட 5 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். புழல் சிறையில் பணியாற்றிய ஊழியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று தமிழக சிறைத்துறை அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புழல் சிறை
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். சிறை அதிகாரிகள் இடமாற்றம் விவரம் வருமாறு:-
* சென்னை புழல்-1 சிறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் இளைஞர் சிறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
* கோவை மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில்குமார், சென்னை புழல்-1 சிறை சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
* கோவை மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு ஆர்.கிருஷ்ணராஜ் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி-சேலம் சிறைகள்
* திருச்சி மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு முருகேசன் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார்.
* சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு எம்.ஆண்டாள் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
* திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் கடலூர் சிறை சூப்பிரண்டாக பதவி ஏற்கிறார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.