‘அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்’ கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்’ என்று கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2018-09-01 22:15 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது “சத்துணவு அமைப்பாளர்” பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் பெயருடன் “பிரவுன் கவரில்” இருந்த 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த பணத்தை தான் பெற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்திகள் ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குட்கா விவகாரத்தில் வாங்கிய லஞ்சத்தையும், அமைச்சர் பதவியிலும் பெற்றுள்ள லஞ்சத்தையும் மேலும் உறுதி செய்திருக்கிறது.

சி.பி.ஐ. விசாரணையில் இருக்கின்ற நிலையில், அரசு பணிகளிலும் அமைச்சரின் தந்தையே லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட பிறகும், ரூ.20 கோடிக்கு மேல் லஞ்சம் வசூல் செய்த பட்டியல் சிக்கிய பிறகும் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல சகித்துக் கொள்ள முடியாதது.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சரும், காவல்துறை டி.ஜி.பி.யும் பதவியில் தொடர்ந்து கொண்டிருப்பதுபோல், இப்போது வருமான வரிச் சோதனையில் வெளிவந்துள்ள மெகா ஊழலுக்குப் பிறகும் பதவியில் நீடிக்க சுகாதாரத்துறை அமைச்சர் முயற்சி செய்வது அரசியல் சட்டத்திற்கு செய்யும் துரோகமாகும்.

ஆகவே, இனியும் எவ்வித காலதாமதமும் செய்யாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்றும் அவர் பதவி விலக மறுத்தால் முதல்-அமைச்சர் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழக கவர்னர், டாக்டர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்