டிசம்பர் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது உள்ளாட்சித்துறை அமைச்சர் உறுதி

சென்னைக்கு டிசம்பர் வரையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.;

Update: 2018-05-21 22:00 GMT
சென்னை, 

‘தொலைநோக்கு திட்டம் 2023’ கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரத்து 988 கோடி 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகருக்கு மட்டும் 3 ஆயிரத்து 256 கோடி 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்துக்கு தினந்தோறும் 7 ஆயிரத்து 381 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகரில் 650 மில்லியன் லிட்டர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகருக்கு டிசம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

சென்னை மாநகராட்சியில் 206 குளங்கள் மற்றும் ஏரிகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக வில்லிவாக்கம்-சிட்கோ நகர் பகுதியில் உள்ள 33 குளங்கள், ஏரிகள் ரூ.21.85 கோடியில் சீரமைக்கப்படுகிறது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.7 ஆயிரத்து 450 கோடியில் 18 பெரிய குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 11 திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.,

தமிழகத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் வகையில் 14 மிகப்பெரிய குடிநீர் திட்டங்களுக்கு ரூ.21 ஆயிரத்து 50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொன்றாக செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

நெம்மேலியில் 150 மில்லியன் கன லிட்டரும், போரூரில் 400 மில்லியன் கன லிட்டரும் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் திட்டப்பணிகளை திறம்பட கையாள்வதற்கு தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் உள்நாட்டு பயிற்சி மற்றும் வெளிநாட்டு பயிற்சி என குடிநீர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்