‘என் மகன் காதில் ‘ஹெட்போன்’ மாட்டியதால் எனது எச்சரிக்கையை கவனிக்கவில்லை’ காஷ்மீரில் பலியான சென்னை வாலிபரின் தந்தை பேட்டி

காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசிய போது என் மகன் காதில் ‘ஹெட்போன்’ மாட்டி இருந்ததால் எனது எச்சரிக்கையை கவனிக்கவில்லை என பலியான வாலிபரின் தந்தை உருக்கமாக தெரிவித்தார்.;

Update: 2018-05-09 22:00 GMT
ஆவடி, 

ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். இவர், தனது குடும்பத்துடன் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு பஸ்சில் சுற்றுலா சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் ராஜவேலின் மகன் திருமணி செல்வம் (வயது 23) படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் நேற்று முன்தினம் இரவு ஆவடி அருகே உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் பலியான வாலிபரின் பெற்றோரிடம் வழங்கினர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வேணுகோபால் எம்.பி., சுதர்சனம் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலியான திருமணி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் நேற்று மதியம் 12.45 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இறந்த திருமணி செல்வத்தின் தந்தை ராஜவேல் கூறியதாவது:-

எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரும் கடந்த 4-ந் தேதி ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்த்து விட்டு டெல்லி வந்தோம். அங்கு சுற்றி பார்த்து விட்டு காஷ்மீர் மாநிலம் சென்றோம். அங்கு அறை எடுத்து தங்கி 2 நாட்கள் சுற்றிப்பார்த்தோம். மீண்டும் 7-ந் தேதி நாங்கள் அனைவரும் பிரிந்து 4 பஸ்சில் நர்பால் பகுதியில் சுற்றுலா சென்று கொண்டிருந்தோம்.

அப்போது சிறிது தூரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். பஸ் சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் தூரத்தில் இருந்தே பஸ்சை நோக்கி கற்களை வீசி தாக்கினர்.

இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். பஸ்சில் முன் இருக்கையில் நானும், எனது மனைவியும் அமர்ந்து இருந்தோம். பின் இருக்கையில் எனது மகன் திருமணிசெல்வம் காதில் ‘ஹெட்போன்’ மாட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தார். நான், எனது மகனுக்கு எச்சரிக்கை செய்தேன்.

அந்த நேரம் பஸ்சில் பயணம் செய்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டதாலும், என் மகன் காதில் ‘ஹெட்போன்’ மாட்டி இருந்ததாலும், எனது எச்சரிக்கையை அவன் கவனிக்கவில்லை.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசிய கற்கள், பஸ் கண்ணாடியை உடைத்துக்கொண்டு எனது மகனின் தலையில் பலமாக பட்டது. எனது மனைவிக்கும் அடிபட்டது. பஸ்சில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் வரை உயிரிழந்தனர்.

எனது மகனை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு எனது மகன் இறந்து விட்டான். இதுபற்றிய தகவல் கிடைத்து காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல் கூறினார்.

நாங்கள் சென்னை வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கு பத்திரிகையாளர்கள் என்னிடம் பேட்டி எடுக்க வந்தனர். ஆனால் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், நான் பத்திரிகைகளுக்கு பேட்டி தரக்கூடாது என்று கூறி என்னை தனியாக அழைத்து சென்று வைத்துக்கொண்டனர்.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள பலர் பாதுகாப்பு இன்றி தவிக்கின்றனர். மத்திய அரசு சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்