தமிழகத்தில் 1,477 கிராமங்கள் புகை இல்லாததாக மாற்றப்படும் எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல்
தமிழகத்தில் 1,477 கிராமங்கள் புகை இல்லாததாக மாற்றப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குனரும், எண்ணெய் நிறுவனங்களின் மாநில இணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.சித்தார்த்தன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ‘கிராம ஸ்வராஜ் அபியான்’ திட்டத்தின் ஓர் அங்கமாக வருகிற 20-ந்தேதியை உஜ்வலா தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் மூலம் கியாஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு புதிய இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, ஒவ்வொரு வினியோகஸ்தர் மூலமும் குறைந்தபட்சம் 100 புதிய இணைப்புகளை அளிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச கியாஸ் இணைப்பை அளிக்கும் ‘பிரதம மந்திரி உஜ்வலா’ திட்டம் குறித்தும் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 1,200 இடங்களில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
புகை இல்லா கிராமம்
உஜ்வலா திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 15 லட்சம் பேர் இலவச கியாஸ் இணைப்பு பெறுவதற்கு தகுதியானவர்களாக இருக்கலாம் என்று கருதுகிறோம். நாடு முழுவதும் 21,058 கிராமங்கள் புகை இல்லா கிராமங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,477 கிராமங்களும், புதுச்சேரியில் 10 கிராமங்களும் புகை இல்லா கிராமங்களாக மாற்றப்படும்.
இந்த கிராமங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் கியாஸ் இணைப்பு இல்லாத வீடுகள் கண்டறியப்படும். பின்னர் அந்த வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ஊழியர்கள் கூடுதலாக ரூ.60 வரை பணம் கேட்பதாக புகார்கள் வருகின்றன. வாடிக்கையாளர்கள் யாரும் பில் தொகையைவிட கூடுதல் பணம் கொடுக்கத்தேவையில்லை. கூடுதல் பணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (எல்.பி.ஜி.) தலைமை பொதுமேலாளர் எல்.கே.எஸ்.சவான், தலைமை தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.