வங்க கடலை அதிரவைத்த ராணுவ சாகசம் பிரதமர் நரேந்திர மோடி ரசித்து பார்த்தார்

முப்படையினரின் சாகச நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ரசித்து பார்த்தனர்.;

Update: 2018-04-12 23:45 GMT
சென்னை,

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள திருவிடந்தையில் நடந்துவரும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவிடந்தை கடற்கரையில் முப்படையினரின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக அமைக்கப்பட்டு இருந்த தனி மேடையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் பாம்ரே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். சாகச நிகழ்ச்சியை பார்வையிட தனியாக கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் வெளிநாடுகள் மற்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கண்காட்சியாளர்கள், கருத்தாளர்கள் அமர்ந்து பார்வையிட்டனர்.

முப்படையினரின் சாகச நிகழ்ச்சியில் முன்னோட்டமாக 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த கண்காணிப்பு விமானமான டார்னியர் விமானத்தில் இருந்து 8 விமானப்படை வீரர்கள் பாராசூட்டை மாட்டிக்கொண்டு குதித்தனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் சரியாக பிரதமர் அமர்ந்து இருந்த மேடை முன்பு தரை இறங்கினார்கள். அதில் ஒருவர் தேசிய கொடியை ஏந்தியப்படி தரை இறங்கினார்.

வங்க கடலில் கிழக்கு கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.என்.எஸ். சுமித்ரா, ஐ.என்.எஸ். ஷகியாத்திரி, ஐ.என்.எஸ். கமோத்ரா, ஐ.என்.எஸ். குர்கி ஆகிய 4 போர் கப்பல்கள் திருவிடந்தையில் பிரதமர் அமர்ந்திருந்த மேடைக்கு எதிரே சுமார் 2 கடல் மைல் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருந்தன. கடலில் குறிப்பிட்ட துரத்தில் வைக்கப்பட்டு இருந்த இலக்கை நோக்கி எந்திர துப்பாக்கிகளால் சுட்டு போர் கப்பலில் இருந்தவர்கள் சாகசம் செய்தனர்.

ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியில் 15 ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் மேடைக்கு எதிர்புறம் வானில் வட்டமிட்டப்படி சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். தொடர்ந்து 3 டார்னியர் ரக கண்காணிப்பு விமானங்களின் அணிவகுப்பு நடந்தது.

ஆவடியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி வண்டிகளில் ராணுவ வீரர்கள் மணல் பரப்பில் பாய்ந்து வந்து சாகசங்களை செய்து காண்பித்தனர். இதில் 10 நிமிடத்தில் 20 அடி நீளம் பாலம் அமைக்கும் பீரங்கி வண்டிகள், 600 குதிரைத்திறன் கொண்ட யு.ஆர்.டி.இ. ரக பீரங்கி வண்டிகள், கமாண்டோ கண்ட்ரோல் ரக பீரங்கி வண்டிகள், அர்ஜூன் மார்க்-2 ரக பீரங்கி வண்டிகளில் வீரர்கள் சாகசங்கள் செய்து காண்பித்தனர்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சாகச நிகழ்ச்சி வங்க கடலை அதிரவைக்கும் வகையில் இருந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் பாம்ரே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சாகச நிகழ்ச்சிகளை துல்லியமாக பார்க்க உதவும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்