சீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது

சீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார். #Seeman #MansoorAliKhan

Update: 2018-04-12 13:13 GMT
சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டன. 

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை வந்தார். பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சீமான், பாரதி ராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு பாரதீராஜா விடுவிக்கப்பட்ட போதும், சீமான் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக கைது செய்யப்படுபவர்கள் 6 மணிக்கு விடுவிக்கப்படுவர். ஆனால், சீமான் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அவர் கைது ஆக கூடும் என தகவல்கள் பரவின. 

சீமான், வெற்றி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என்று பாரதிராஜா தெரிவித்து வெளியே செல்ல மறுத்தார். இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார். ஆனால், மன்சூர் அலிகானை மண்டபத்திற்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், தொடர்ந்து மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.  காவல்துறையை கண்டித்து மண்டபம் அருகே போராட்டம் நடத்திய 50 -க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்