எல்லோருடைய வீட்டிலும் இன்று கருப்பு கொடி ஏற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு

பிரதமர் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எல்லோருடைய வீட்டிலும் இன்று கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2018-04-12 00:00 GMT
நாகப்பட்டினம்,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் செம்பியமாதேவி கிராமம் சென்றார். அங்கு அவர் பேசியதாவது:-

காவிரி உரிமை மீட்பு பயணத்தை அனைத்து கட்சிகளின் சார்பாக ஐந்தாவது நாளாக நடத்திக் கொண்டிருக்கிறோம். நாளை(இன்று) மாலை கடலூர் மாவட்டத்தில் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, கடலூரில் இருந்து ஏறக்குறைய 1,000 வாகனங்களில் சென்னையை நோக்கி ஒரு மிகப்பெரிய பேரணியாக சென்று, தமிழக கவர்னரை சந்திக்க இருக்கிறோம்.

தமிழகத்தில் இன்றைக்கு காவிரி பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துபவர்கள், அதிலே பங்கேற்பவர்கள் எல்லாம் தமிழக மக்களுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், காவிரி விவகாரத்தில் தங்களுடைய உணர்வை விளையாட்டுப் போட்டிகளின் மூலம் வெளிப்படுத்தினால், எந்தப் பிரச்சினையும் வராது என்று நான் ஏற்கனவே எடுத்துச் சொன்னேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் எடுத்துச் சொன்ன கருத்து பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை.

போட்டிகள் நடப்பதை மாற்றுவது, அல்லது வேறு ஏதேனும் கருத்துகளை அரசு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், காவிரிப் பிரச்சினை பற்றியெல்லாம் இங்கிருக்கின்ற ஆட்சிக்கு கவலையில்லை என்பதால், எப்படியாவது அந்தப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று, 4 அடுக்கு, 5 அடுக்கு என்று போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து இருக்கின்றனர்.

ஆனால், இப்படியொரு நேரத்தில் விளையாட்டுப் போட்டி நடப்பதை கண்டித்து, திரைத்துறையை சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட கலையுலகை சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் சென்று போராடி இருக்கிறார்கள். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்யாமல், அவர்கள் மீது தடியடி நடத்தி, கலவரத்தை ஏற்படுத்தி, பலர் காயமடைந்த பிறகு, அவர்களை கைது செய்திருக்கிறார்கள் என்றால், இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு, அவர்கள் நேரம் வழங்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமரை சந்திக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரோ, துணை முதல்-அமைச்சரோ அல்லது தலைமைச் செயலாளரோ மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று சொல்கிறார். இதைவிட வெட்கக்கேடு வேறுண்டா?

அனைத்து கட்சி கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுத்தபடி, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மற்றும் கேபினட் மந்திரிகள் வரும்போது கருப்பு கொடி போராட்டம் நடத்துவது என அறிவித்திருக்கிறோம். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். சென்னை, அடையாறு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதை தடுத்து நிறுத்த, எல்லோரையும் கைது செய்யவிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களையும் கூட ஒருவேளை கைது செய்யலாம். ஆங்காங்கே இருக்கின்ற தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம். எத்தனை பேரை கைது செய்து விடுவீர்கள்? எவ்வளவு பேரை சிறையில் அடைத்து விடுவீர்கள்?

எத்தனை பேரை நீங்கள் சிறையில் அடைத்தாலும், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் இரு நாட்களுக்கு முன்பாக நாங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்.

எனவே, பிரதமர் வரும் நாள், தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று இந்தியாவுக்கே தெரிவிக்கும் வகையில், எல்லோர் வீட்டிலும் கருப்பு கொடியேற்ற எல்லோரும் தயாராக இருக்கும்படி அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். நாம் நடத்தும் போராட்டம் தேர்தலுக்காக நடைபெறும் போராட்டமல்ல. எங்களுடைய கட்சி வளர்ச்சிக்காக நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, காவிரியில் நமது உரிமைகளை மீட்பதற்காக நடைபெறும் போராட்டம். அந்தப் போராட்டத்தில் பங்கேற்க அனைவரும் தயாராகுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்