நாளை சென்னை வரும் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்
நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை ஐஐடி-யில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PMmodi;
சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் சுமார் ரூ.800 கோடியில், 10-வது ராணுவ தளவாட கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சி இன்று (புதன்கிழமை) தொடங்கியது..இதில் 6 வர்த்தக கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
ஆனால் இதன் அதிகாரபூர்வ தொடக்க விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ தளவாட கண்கட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதற்காக நாளை காலை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில், நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடி-யில் பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.