ஐ.பி.எல். போட்டி நடக்க விடாமல் தடுத்து நிறுத்துவோம் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் பேட்டி
ஐ.பி.எல். போட்டி நடக்கவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என்று காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
சென்னை,
காவிரி உரிமை மீட்புக்குழுவின் தலைவர் மணியரசன், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
காவிரி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன் எடுத்துள்ளோம். சென்னையில் நாளை (இன்று) ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதை தடுத்து நிறுத்துவோம்.
போட்டியை நடத்தக்கூடாது என்று நாங்கள் கூறியதை கிரிக்கெட் வாரியம் கேட்கவில்லை. எனவே மைதானத்திற்கு வரும் வழியில் நின்று கொண்டு போராட முடிவு செய்து இருக்கிறோம். கிரிக்கெட் ரசிகர்களை தடுத்து நிறுத்துவோம். நாங்கள் விளையாட்டுக்கு எதிரி அல்ல. அதே நேரத்தில் காவிரி பிரச்சினைக்காக எல்லோரும் இதை செய்ய வேண்டும். ரசிகர்கள் இந்த போட்டியை புறந்தள்ள வேண்டும்.
சேப்பாக்கத்தில் எங்கள் போராட்டம் எப்படி இருக்க போகிறது என்பதை நாளை (இன்று) வந்து பாருங்கள். ரசிகர்களாக நாங்கள் விளையாட்டு மைதானத்திற்குள் செல்வோம். இந்த போட்டிகள் நடப்பது தமிழர்களுக்கு அவமானம்.
தமிழக முதல்-அமைச்சரையும், எம்.பி.க்களையும், எதிர்க்கட்சிகளையும் சந்திக்க மறுத்த பிரதமர் நரேந்திரமோடி எதற்கு தமிழகம் வருகிறார். சென்னை மக்கள் வெள்ளத்தில் தவித்த போது ராணுவம் வந்ததா?.
ராணுவ கண்காட்சியை வேறு மாநிலத்தில் நடத்திக்கொள்ள வேண்டியதுதானே. 12-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம்.
காவிரி வழக்கை 22 நாட்கள் தள்ளிவைக்கிறார்கள். மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏன் கால அவகாசத்தை வழங்குகிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை நாங்கள் கூறவில்லை என்று நீதிபதி கூறுகிறார். எல்லோரும் சேர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறீர்கள். போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
காவிரி வழக்கை 5 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும். நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். ஆளும் கட்சியினர் பச்சைக்கொடி காட்டினால் கருப்பு கொடியால் அதை மாற்றிக்காட்டுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாரதிராஜா உள்ளிட்டோர் புதிய கொடியை அறிமுகம் செய்து இருக்கிறார்களே? என்று கேட்டதற்கு, ‘அவர் அறிமுகப்படுத்தியிருப்பது தமிழ் கொடி தான். இதை எல்லோரும் பயன்படுத்தலாம்’ என்று பதில் அளித்தனர்.