அடுத்த 2 ஆண்டுகளுக்கு பி.எட். கல்லூரிகள் தொடங்க முடியாது துணைவேந்தர் தங்கசாமி பேட்டி

கல்வி தரத்தை மேம்படுத்த அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிதாக பி.எட். கல்லூரிகள் தொடங்க முடியாது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி கூறினார்.;

Update:2018-04-03 03:30 IST
அடுத்த 2 ஆண்டுகளுக்கு பி.எட். கல்லூரிகள் தொடங்க முடியாது துணைவேந்தர் தங்கசாமி பேட்டி
சென்னை,

கல்வி தரத்தை மேம்படுத்த அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிதாக பி.எட். கல்லூரிகள் தொடங்க முடியாது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி கூறினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கல்வியியல் கல்லூரிகள் (பி.எட். கல்லூரிகள்) 731 உள்ளன. அவற்றில் 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் அடங்கும். சுயநிதி கல்லூரிகள் 710 இருக்கின்றன. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியராக வர இனி ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்’ தகுதித்தேர்வு அல்லது தமிழ்நாடு அரசு நடத்தும் தகுதி தேர்வான ‘ஸ்லெட்’ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிக்க 2 வருடங்கள் ஆகும். பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில் மேலும் ஒரு வருடம் தரப்படும். அதற்குள் அந்த பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது பி.எட். படிப்பை 3 ஆண்டுகளுக்குள் படித்து முடிக்க வேண்டும். கல்வியியல் கல்லூரிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கல்வி தரத்தை மேம்படுத்த அடுத்த 2 கல்வி ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் புதிதாக பி.எட். கல்லூரியை தொடங்க முடியாது. இதை தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் வருகைப்பதிவேடு 85 சதவீதம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் தேர்வு எழுத முடியாது. அதே சமயம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வராமல் வந்ததாக வருகைப்பதிவு செய்வது கண்டறியப்பட்டால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இந்த முடிவுகள் அனைத்தும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பதிவாளர் என்.ரவீந்திரநாத் தாகூர் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்