எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்
மத்திய அரசிடம் தமிழக அரசு அடிபணிந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு அருகில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 7 ஆயிரத்து 70 பேருக்கு இருசக்கர வாகனம், சைக்கிள், 3 சக்கர சைக்கிள், தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வரவேற்றார்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுபோன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது இல்லை. பூமி உள்ளவரை ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை வழங்குவோம். ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான அம்மா இருசக்கர வாகனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு இருசக்கர வாகனம் பெற 3 லட்சத்து 35 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். மத்திய அரசிடம், தமிழக அரசு அடிபணிந்து கிடக்கிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லையென்றால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டே மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்கிரஸ் அரசுடன் அங்கம் வகித்தது. ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘அ.தி.மு.க. இரும்புக்கோட்டை போன்றது. இதை தனிப்பட்ட சிலர் கபளகரம் செய்ய முயன்றனர். அதை முறியடித்து விட்டோம். இருந்தபோதிலும் தொடர்ந்து அவர்கள் முயன்று வருகின்றனர். அதையும் முறியடிப்போம். சிலர் தேர்தலின் போது மட்டும் வந்து செல்வர்.
அவர்கள் வெற்றி பெற்ற பின்பு உங்களை வந்து பார்க்க மாட்டார்கள். எங்களை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. என்ற இயக்கம் தொடங்கப்பட்டதும் சந்தித்த முதல் தேர்தலின் போது இதே தொகுதியில் நீங்கள்(தொகுதி மக்கள்) அ.தி.மு.க.வை பெற்றி பெறச்செய்ததை மறக்க மாட்டோம்’ என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.