ஆந்திராவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது ஜெயலலிதா சிலை 21-ந் தேதி பீடத்தில் நிறுத்தப்படுகிறது
ஆந்திராவில் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலை சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிலை வரும் 21-ந் தேதி பீடத்தில் நிறுத்தப்படுகிறது.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் ஆளுயர வெண்கல சிலை வைக்கப்பட இருக்கிறது. அவரது பிறந்தநாளான வரும் 24-ந் தேதி சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலை இருக்கும் இடத்திற்கு வலதுபுறம் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக, எம்.ஜி.ஆர். சிலை அருகே பள்ளம் தோண்டப்பட்டு, தற்போது பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை வந்தது
ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை செய்யும் பணி ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெற்றது.
சிலை செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை சென்னை கொண்டுவரப்பட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. சிலை முழுவதும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.
24-ந் தேதி திறப்பு
வரும் 21-ந் தேதி பீடத்தில் ஜெயலலிதா சிலை நிறுவப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்த நாளான 24-ந் தேதி விழா நடத்தப்பட்டு சிலை திறக்கப்பட இருக்கிறது.
சிலையை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்து வைக்க இருக்கின்றனர்.
விழாவில், அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.