மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 22 கடைகள் அகற்றும் பணி தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைத்து கடைகளும் இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது அந்த பணி தொடங்கியது. #MeenakshiAmmanTemple #Madurai

Update: 2018-02-09 05:35 GMT
மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.

மேலும் கிழக்கு கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் சிலைகள் கருகின. 5-க்கும் மேற்பட்ட தூண்கள் கீழே சாய்ந்தது. 

இந்த பயங்கர தீ விபத்துக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள் காரணம் என்று கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்ட கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கியது.

ஆனால் கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் தந்தால் உடனடியாக காலி செய்வதாகவும் கூறினர். 

இந்த நிலையில்  மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வீரவசந்த ராயர் மண்டப பகுதிகளில் உள்ள தீப்பிடித்து எரிந்த கடைகள் போக மீதமுள்ள 22 கடைகளை இன்று மதியம் 12 மணிக்குள் அகற்ற உத்தர விட்டார்.

மேலும் அந்த கடைகளில் உள்ள பொருட்களை வேறு இடத்தில் வைப்பதற்கு  கோவில் நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவையடுத்து இன்று காலை கடை உரிமையாளர்கள் கோவில் வளாகத்துக்குள் வந்தனர்.  அங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசாரும் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்து அப்புறப்படுத்தினர். 22 கடைகளும் காலி செய்யப்பட்டு வருகின்றன. இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து கடைகளும் காலி செய்யப்படும்.  வருவாய்துறை, காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கடைகளை அகற்றி வருகின்றனர். 

குன்னத்தூர் சத்திரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து காலி செய்யும் கடைகளுக்கு மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகள்