ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி தேர்தல் ஆணையம் ஜனநாயகத்துக்கு செய்த துரோகம் ஜெ.தீபா அறிக்கை
ஜனநாயகம் தோற்று பணநாயகம் வெற்றி பெற்றிருப்பதை தமிழக மக்கள் அனைவருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.;
சென்னை,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஜனநாயகம் தோற்று பணநாயகம் வெற்றி பெற்றிருப்பதை தமிழக மக்கள் அனைவருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. முறையாக தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறி கடைசி நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் போலியான வீடியோ வெளியிடப்பட்டது. இலவச பொருட்களையும், லஞ்ச பணத்தையும் அள்ளி வீசிய டி.டி.வி.தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றிக்கனியை அ.தி.மு.க.விடம் இருந்து தட்டி பறித்துள்ளார்.
முறைகேட்டில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்யாமல் மீண்டும் போட்டியிட அனுமதித்தது தேர்தல் ஆணையம் ஜனநாயகத்துக்கு செய்த துரோகமாகும். தேர்தலில் நான் போட்டியிட்டால் என்னுடைய வெற்றி உறுதி என்பதை அறிந்து என்னுடைய வேட்புமனுவை நிராகரிக்க வைத்து சதி செய்தார்கள். ஆட்சியை கலைத்து பொதுத்தேர்தல் நடத்தினால் தான் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். வழியில் மக்கள் ஆட்சி மீண்டும் மலரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.