மாமல்லபுரத்தில் நாட்டிய விழா தொடங்கியது ஜனவரி 22-ந் தேதி வரை நடக்கிறது

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் இந்திய நாட்டிய விழாவை நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

Update: 2017-12-22 19:21 GMT
மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் இந்திய நாட்டிய விழாவை நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டிய விழா நேற்று தொடங்கியது. இந்த விழா ஜனவரி 22-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் வரவேற்றார். சுற்றுலாத்துறை செயலாளர் அபூர்வ வர்மா முன்னிலை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நாட்டிய விழாவை தொடங்கிவைத்தனர்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, “1992-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த இவ்விழா ஆண்டுதோறும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 1 கோடியே 19 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். மாமல்லபுரத்துக்கு மட்டும் 26 லட்சத்து 86 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும், 37 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் வருகை தந்துள்ளனர்” என்றார்.

அமைச்சரிடம் மாமல்லபுரம் முதன்மை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் சார்பில், வழிகாட்டிகளுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

விழாவில் செங்கல்பட்டு சார்-ஆட்சியர் ஜெயசீலன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சின்னசாமி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், நகர செயலாளர் ஏ.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா நாட்கள் முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சுபுடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நேற்று முதல் நாள் நிகழ்ச்சியாக விநாயகா நாட்டியாலயா பள்ளியின் மீனாட்சி ராகவன் குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் மதுரை அய்யா கலைக்கூடம் சார்பில் கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும் செய்திகள்