செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் தஷ்வந்த் ஆஜர் நீதிபதி முன்பு கூச்சலிட்டதால் பரபரப்பு

சிறுமி ஹாசினியை கற்பழித்து, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2017-12-20 21:00 GMT
செங்கல்பட்டு,

சென்னை போரூரை சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபர் ஹாசினி என்ற சிறுமியை கடந்த ஆண்டு கற்பழித்து, எரித்து கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தமிழக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், ஹாசினியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த 18-ந்தேதி மாங்காடு போலீசார் தஷ்வந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அன்றைய தினம் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான பாபு, தேவி, துர்காதேவி ஆகியோர் கோர்ட்டுக்கு வராததால், வழக்கு விசாரணையை 20-ந்தேதி(நேற்று)க்கு ஒத்திவைத்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தஷ்வந்த் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் வழக்கின் முக்கிய சாட்சிகளான பாபு, தேவி, துர்காதேவி ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகினர். தனி அறையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், சிறுமி ஹாசினியை அழைத்து சென்றது தஷ்வந்த் தான் என்பதை நீதிபதியிடம் உறுதிபடுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட தஷ்வந்த், சிறுமி ஹாசினியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், தான் கொடிய போதை பழக்கத்திற்கு அடிமையானதால்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும், தனது தாயார் சரளாவை தான் கொலை செய்யவில்லை எனவும் கூறி நீதிபதி முன்பு அவர் கூச்சலிட்டார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சிறுமியை ஹாசினியை கற்பழித்து, எரித்து கொலை செய்தது தஷ்வந்த் தான் என்பது 50 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாக தெரிவித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் அடுத்த விசாரணை 26-ந்தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் தஷ்வந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார்.

சிறுமி ஹாசினி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதத்துக்குள் முழுமையாக விசாரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்