குஜராத் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி: ‘காங்கிரஸ் செய்த சாதி அரசியலுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடி’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் செய்த சாதி அரசியலுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி வாகை சூடியது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாட்டில் 3 மிகப்பெரிய புரட்சிகளை செய்து வெற்றி பெற்று இருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்ததும் முடிந்தது பா.ஜ.க. என்றார்கள். ஆனால் அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிவிக்கப்பட்டதும் இனி பா.ஜ.க.வால் எழவே முடியாது என்றார்கள். இப்போது வீறுகொண்டு எழுந்து நிற்கிறது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது மக்களுக்கான திட்டம். அதை, அரசியல்வாதிகளும், கொள்ளையடித்தவர்களும் எதிர்க்கத்தான் செய்வார்கள் என்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
21 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. காங்கிரஸ் செய்த சாதி அரசியலுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார்கள்.
மாற்றத்தை கொண்டு வரப்போவதாக ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். காங்கிரஸ் நேற்று தொடங்கப்பட்ட கட்சி அல்ல. 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி. பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்?. எதிர்கட்சிகளே இல்லாமல் ஆட்சி செய்தார்கள். அப்படி இருந்தும் என்ன மாற்றத்தை தந்தார்கள்.
நாட்டை சுத்தப்படுத்த கழிப்பறை கட்டக்கூட புதிதாக ஒரு பிரதமர் வரவேண்டிய நிலைதான் இருந்தது. இத்தனை ஆண்டுகள் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அதை மக்கள் புரிந்துகொண்டார்கள். இனி நாட்டை காக்க பா.ஜ.க.வால் தான் முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால்தான் குஜராத் வெற்றி மட்டுமல்ல காங்கிரஸ் கையில் இருந்த இமாச்சல பிரதேசத்தையும் பறித்து நரேந்திர மோடி கையில் கொடுத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.