இந்து கோவில்களை இடிக்க சொன்னதாக திருமாவளவனுக்கு எதிராக மதவெறி கருத்துகள் பரப்புவதா? சீமான் கண்டனம்
இந்து கோவில்களை இடிக்க சொன்னதாக திருமாவளவனுக்கு எதிராக மதவெறி கருத்துகள் பரப்புவதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் கடந்த 6–ந்தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் – இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் தலைமையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சில தர்க்கரீதியான கருத்துகளை முன்வைத்தார். ஆனால் அக்கருத்துகள் முழுமையாகத் திரிக்கப்பட்டு இந்து கோவில்களை இடிக்க சொன்னதாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
திருமாவளவன் மீது தொடுக்கப்படும் அவதூறுகளையும், அவருக்கு எதிரான வன்முறை பேச்சுகளையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. கருத்தியல் ரீதியிலும், அரசியல் முடிவுகளிலும் அவரோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக அவரோடு இருக்கிற உறவிலும், அன்பிலும் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆகவே, அண்ணன் திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வட இந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களை தமிழ் மண்ணில் செயல்படுத்த முயன்றால் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என மதத்துவேச அமைப்புகளை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.