அமித்ஷா உள்பட 139 பேருக்கு நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்து தேர்தல் கமிஷன் உத்தரவு

அமித்ஷா உள்பட 139 பேருக்கு நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்து தேர்தல் கமிஷன் உத்தரவு;

Update: 2017-12-06 19:34 GMT
சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்களாக பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா உள்பட 139 பேருக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை வழங்கி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நட்சத்திர பேச்சாளர்களின் பெயரை பதிவு செய்ய ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருந்தது. பெயர் பதிவு செய்திருந்தால், அவர்கள் மேற்கொள்ளும் பயணச் செலவு, வாகன போக்குவரத்துச் செலவு போன்றவை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாது. அந்த வகையில், 139 பேரின் பெயர், நட்சத்திர பேச்சாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. சார்பில் தேசியத்தலைவர் அமித்ஷா, மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், வானதி சீனிவாசன் உள்பட 40 பேர், அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்றுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்காக இவர்கள் மேற்கொள்ளும் பயணச் செலவுகள், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரின் கணக்கில் சேராது.

அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்பட 31 அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 19 பேருக்கு நட்சத்திர பேச்சாளர் அனுமதி தரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்