‘எனது வேட்புமனு திட்டமிட்டு நிராகரிப்பு’ ஜெ.தீபா குற்றச்சாட்டு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனையின்போது, ஜெ.தீபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.;
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்று வேட்புமனு பரிசீலனையின்போது, அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
அதற்கான காரணம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும்போது, “படிவம் 26-ல் தன் மீதான வழக்குகள் மற்றும் சொத்துகள் குறித்த தகவலை அவர் தெரிவிக்காத காரணத்தினால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜெ.தீபா நிருபர்களிடம் கூறும்போது, “என்னை பார்க்கும் போதெல்லாம் எனது அத்தையை (ஜெயலலிதா) பார்க்கும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க. ஓட்டு வங்கி பாதிக்கும் என்று கருதுகிறார்கள். எனவே திட்டமிட்டே எனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. படிவம் 26-ஐ கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கிடையாது. ஆனால் வேறு பிழைகள் எதுவும் இல்லாததால், அதை காரணம் காட்டி மனுவை நிராகரித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. எனவே இது குறித்து வழக்கு தொடர்வேன்” என்று கூறினார்.