மணல் குவாரி மூடல் உத்தரவு: தமிழக அரசின் மேல்முறையீடு மீது 8-ந் தேதி இறுதி விசாரணை

மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது 8-ந் தேதி இறுதி விசாரணை நடக்கிறது.

Update: 2017-12-05 23:15 GMT
மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வழக்கை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகா தேவன் விசாரித்தார்.

முடிவில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று அவர் கடந்த 29-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ‘சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியைத் தவிர மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும்’ என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

தமிழக அரசு மேல்முறையீடு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதில், வழக்குதாரர் இறக்குமதி செய்துள்ள மணல், தொழிற்சாலை பயன்பாட்டிற்கான மணல் (தாது மணல்) என்ற வரையறைக்குள் வருவதாகவும், ஆனால் இறக்குமதி லைசென்சு, போக்குவரத்து அனுமதிச் சீட்டு ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் பெறாததால், மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், பொதுநல வழக்கு போல இந்த வழக்கையும் கையாண்டுள்ளதால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறுதி விசாரணை

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் ஆஜராகி, “தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிட்டார். ஆனால் இது குறித்து உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நீதிபதிகள், இறுதி விசாரணைக்காக வருகிற 8-ந் தேதிக்கு (நாளை மறுதினம்) வழக்கை ஒத்திவைத்தனர். 

மேலும் செய்திகள்