சுயேச்சை வேட்பாளர் விஷாலுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவிப்பதா? கராத்தே தியாகராஜன் கண்டனம்

தி.மு.க. வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகர் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2017-12-05 22:00 GMT
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குழப்பம் ஏற்படுத்துகிறார்

தி.மு.க.வில் இருந்தபோது அங்குள்ள தலைவர்களிடையே குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தி அடித்து விரட்டாத குறையாக வெளியே தள்ளப்பட்ட குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியும் கொடுத்தது.

அந்த பதவிக்கேற்ப பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியிலும் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நவம்பர் 19-ந் தேதி நடந்த இந்திராகாந்தி பிறந்த நாள் விழாவில் பேசிய குஷ்பு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் என்று பேசி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அப்படி என்றால், சோனியாகாந்தி, ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசர் பகுதிநேர தலைவரா?.

நடிகர் விஷாலுக்கு வாழ்த்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் அனுமதி பெற்று தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. கூட்டணி கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் வேட்பாளர் மருது கணேஷ் முதல் சுற்றிலேயே வெற்றி வீரராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் ஒரு குழப்பத்தை குஷ்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

குஷ்பு மீது நடவடிக்கை

விஷால் மட்டுமல்ல யார் போட்டியிட்டாலும் மண்ணை கவ்வுவார்கள். தி.மு.க. வேட்பாளரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் குஷ்பு, விஷாலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, வாழ்த்து வேறு, ஆதரவு வேறு என்று சப்பை கட்டு கட்டுகிறார்.

நடிகர் சங்கத் தேர்தலில் வாழ்த்து சொல்லியிருந்தால் யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால், கூட்டணி கட்சி தேர்தல் களத்தில் இருக்கும்போது இப்படி தான்தோன்றித்தனமாக வாழ்த்து சொல்வது திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். எனவே, தொடர்ந்து குட்டையை குழப்பி கொண்டிருக்கும் குஷ்பு மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்