அ.தி.மு.க. எம்.பி. பெயரில் போலி ‘லெட்டர்பேடு’ தயாரிப்பு சென்னை என்ஜினீயர் கைது

ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்ய அ.தி.மு.க. எம்.பி. பெயரில் போலி ‘லெட்டர்பேடு’ தயாரித்த சென்னை என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-20 22:15 GMT
விழுப்புரம், 

ரெயிலில் பயணம் செய்ய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் அவசர ஒதுக்கீடு (எமர்ஜென்சி கோட்டா) பிரிவில் செல்லும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு திருச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யான குமாரின் பெயரை பயன்படுத்தி சிலர் அடிக்கடி ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்வதாக சென்னை ரெயில்வே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் குமார் எம்.பி.யை தொடர்பு கொண்டு விசாரித்ததில், சிலர் தனது பெயரில் போலியாக ‘லெட்டர்பேடு’ தயாரித்து அதன் மூலம் ரெயிலில் பயணம் செய்து வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறினார்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில்...

இதைத்தொடர்ந்து ரெயில்வே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது தாம்பரம் பகுதியை சேர்ந்த நசிருதீன் என்பவர் குமார் எம்.பி.யின் பெயரை பயன்படுத்தி அவசர ஒதுக்கீட்டில் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தனது நண்பரான சென்னை சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வரும் குமார் மகன் செந்தில் (வயது 29) என்பவர் தனக்கு பயணச்சீட்டு எடுத்து கொடுத்ததாக கூறினார்.

என்ஜினீயர் கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று சோழிங்கநல்லூருக்கு விரைந்து வந்து செந்திலை பிடித்து விசாரணை நடத்தினர். புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் என்ஜினீயரிங் படித்துவிட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

மேலும், அவரது தந்தை குமார் அ.தி.மு.க. பிரமுகராக உள்ளார். அதை பயன்படுத்தி செந்தில், குமார் எம்.பி.யின் பெயரில் போலி ‘லெட்டர்பேடு’ தயாரித்து அதனை ‘ஜெராக்ஸ்’ எடுத்து தனது நண்பர்கள் பலருக்கு கொடுத்து அதன் மூலம் பலமுறை ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து செந்திலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த போலி ‘லெட்டர்பேடு’ நகல்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்