பசுமைத் தீர்ப்பாய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-11-17 21:45 GMT

சென்னை,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் தமிழகத்தின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் கேரளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டிருந்த காலத்தில் அதன் நீர்த்தேக்கப் பகுதிகள் காலியாக கிடந்தன. இதைப் பயன்படுத்தி அப்பகுதிகளில் ஏராளமான விடுதிகளை கேரளம் கட்டிக்கொண்டது. அணையின் நீர்மட்டம் 156 அடியாக உயர்த்தப்பட்டால் அந்த விடுதிகள் தண்ணீரில் மூழ்கி விடும். அதைத் தடுப்பதற்காகவே நீர்மட்டம் உயர்த்தப்பட்டால் அணை உடைந்து கேரளத்தின் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்ற வதந்தியைப் பரப்பி தேவையற்ற பதற்றத்தை கேரள அரசு ஏற்படுத்தியது. ஆனால், முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு ஆதாரத்துடன் கூறிவிட்டதால் கேரளத்தின் சதி முறியடிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை காரணம் காட்டி, நீர்த்தேக்கப் பகுதிகளில் வாகன நிறுத்தத்தை கேரள அரசு அமைத்துவிட்டால், அவை மூழ்கிவிடும் என்பதைக் காரணம் காட்டியே அணையின் நீர்மட்டத்தை 156 அடியாக உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்தை கேரள அரசு தயாரித்த நாளில் இருந்தே இதை சுட்டிக்காட்டி இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிவருகிறேன். ஆனால், தமிழக அரசு விழிப்புடன் இருப்பதற்கு பதிலாக அலட்சியத்துடன் இருந்ததால் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழகம் நடத்திய 35 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். அந்த வெற்றியை பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குலைத்து விடக்கூடாது. எனவே, பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டின் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை வல்லுனர் குழுவின் மூலம் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்