வெளி மாநில மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது வைகோ அறிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் வெளி மாநில மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வைகோ கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் 1058 பணி இடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 16–ந்தேதி தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகள் 2017 நவம்பர் 7–ந்தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை ஆய்ந்து நோக்கும்போது, ஏறத்தாழ 100 பேருக்கும் மேல், அதாவது பத்து விழுக்காட்டுக்கு மேல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. இதுவரை தமிழக அரசால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளிலும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதோ, வெற்றி பெறுவதோ இல்லை.
நீட் தேர்வினைத் தொடர்ந்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், தமிழக மக்களின் வரிப்பணத்தால் நடத்தப்படும் அரசு பாலிடெக்னிக்குகளில் பிற மாநிலத்தவர்கள் வேலை பெறுவதற்கு உடந்தையாக தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அப்படி வெளியிடப்பட்டுள்ள பத்தாம் புள்ளியின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பு எண் 2–ல், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள சாதிச்சான்றிதழ்கள் உடையோர், பொதுப்போட்டியினராகக் கருதப்படுவர் என்றும், அவர்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வெளி மாநில மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வாயில்களைத் திறந்து வைக்கும் உள்நோக்கம் உடையது, இது கண்டனத்திற்கு உரிய நடவடிக்கை ஆகும்.
இது போன்ற நிலைமை நீடித்தால், இளநிலை, முதுநிலை கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள், பல்வகைப்பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள், முதுகலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக்கல்வியில் பணி ஆற்றும் ஆசிரியர்கள் போன்ற பணி இடங்களுக்கு, அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான நியமனங்களிலும், வெளிமாநில மாணவர்கள் நுழைந்து, தமிழகத்தில் பயின்ற தமிழக மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலும், வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் புகுத்தும் விதத்திலும் நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்குகளில் ஆசிரியர் பணி பெறத்தக்க வகையில் தேர்வு நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.