அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகங்கள் சீர்குலைந்து தள்ளாடுகின்றன மு.க.ஸ்டாலின் அறிக்கை

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து கழகங்கள் முற்றிலும் சீர்குலைந்து, தளர்ந்து தள்ளாடும் நிலைக்கு வந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2017-11-11 18:59 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டிடங்கள், பேருந்துகள், பணிமனைகள் உள்ளிட்டவற்றை 2,453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்து குதிரை பேர அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அரசு போக்குவரத்து கழகத்தின் 490 பேருந்துகள் 44.27 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள் 12 கோடி ரூபாய்க்கும், போக்குவரத்து கழகக்தின் ஒர்க் ஷாப், பேசின்பாலம், தி.நகர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சொத்துகள் மட்டும் ரூ.580.63 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு போக்குவரத்து கழகத்தின் தலைமையிடமாக இருக்கும் பல்லவன் இல்லம் 7.50 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் இந்த அரசு தலைமைச் செயலகத்தையே மத்திய அரசுக்குத் தெரியாமல் அடகு வைத்து விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

சென்னையில் உள்ள வேறு சில போக்குவரத்து பணிமனைகளையும் அடகு வைத்து கடன் வாங்கியுள்ள அ.தி.மு.க. அரசு, ஊழியர்களின் சேம நல நிதி, ஓய்வூதியம், காப்பீடுகள் போன்றவற்றையும் போக்குவரத்து கழகங்களில் பயன்படுத்தி, ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஓய்வூதிய பயன்களை கொடுக்காமல் இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இவற்றையெல்லாம் எண்ணி பார்க்கும்போது அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகங்கள் முற்றிலும் சீர்குலைந்து தளர்ந்து தள்ளாடும் நிலைமைக்கு வந்து விட்டன என்பது தெளிவாக தெரிகிறது.

அடகு வைக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், பணிமனைகளை உடனடியாக மீட்டுப் புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நடைமுறைக்கு எதிராக எடுத்து செலவு செய்துள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நிதிகளை உடனடியாக திரும்ப செலுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்களின் வாழ்வை மேம்படுத்தி, பேருந்துகளை முறையாகப் பராமரித்து, மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அரசு நிதியை சீரழித்து நிதிநெருக்கடியை உருவாக்கி இருப்பதை போல், அரசு போக்குவரத்து கழகங்களின் சொத்துக்களையும் சூறையாடி தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அ.தி.மு.க. அரசு தடைக்கல்லாக இருப்பதை கிஞ்சிற்றும் பொறுத்து கொள்ள முடியாது என்பதை தி.மு.க. சார்பில் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்