கந்துவட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளிப்பு, கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் கைது

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-05 15:43 GMT

சென்னை,

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமையால், அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தார்.  தரையில் தீப்பிடித்து எரிந்த நிலையில் படுத்து கிடக்கும் குழந்தையை தமிழக முதல்-அமைச்சர், நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஆடையில்லாமல், கையில் நோட்டு கட்டை வைத்துக்கொண்டு நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் கேலிச்சித்திரம் வரையப்பட்டு இருந்தது. 

இந்த கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை 
சென்னை, கோவூர் பெரியபனிச்சேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நெல்லை போலீசார் கைது செய்து உள்ளனர். 

நெல்லை மாவட்ட கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து உள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம், பத்திரிகையாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கார்ட்டூனிஸ்ட் பாலா கைதைக் கண்டித்து நாளை மாலை 4 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கார்ட்டூனிஸ்ட் பாலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு செய்தியாசிரியர்கள் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

கந்துவட்டி குறித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 கந்துவட்டி குறித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறும்போது, கார்ட்டூனிஸ்ட் பாலா, எதற்காக கைது செய்யப்பட்டார்?. அவர் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?. தற்போது அவர் எங்கு உள்ளார்? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இந்த கைது நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.  

மேலும் செய்திகள்