சென்னையில் பட்டாசு புகை மண்டலத்தால் 23 விமான சேவை பாதிப்பு

சென்னையில் பட்டாசு புகை மண்டலத்தால் 23 விமான சேவை பாதிக்கப்பட்டது.;

Update: 2017-10-19 17:25 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதன் காரணமாக நேற்று இரவு 10 மணியில் இருந்து 2 மணி வரை சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து இரவு 10.30 மணியளவில் சென்னைக்கு 148 பயணிகளுடன் வந்த விமானம், மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் தரை இறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல சிங்கப்பூர், கோலாலம்பூர், தோகா, பாங்காக், டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஐதராபாத், பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் தரை இறங்க முடியாமலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்ல முடியாமலும் என மொத்தம் 23 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இரவு 2 மணிக்கு பிறகு புகை மண்டலங்கள் மெதுவாக விலகத் தொடங்கியது. அதன்பிறகு விமான சேவை சீரானது.

மேலும் செய்திகள்