தீபாவளியையொட்டி புத்தாடைகள் வாங்குவதற்கு தியாகராயநகரில் அலைமோதிய கூட்டம்

தீபாவளியையொட்டி புத்தாடைகள் வாங்குவதற்கு தியாகராயநகரில் கூட்டம் அலைமோதியது.;

Update: 2017-10-15 14:45 GMT

சென்னை,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வகைகளை சாப்பிட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். மேலும் உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்தவகையில், இந்த வருடம் தீபாவளி பண்டிகை 18–ந்தேதி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னையில் தீபாவளி பொருட்கள் விற்பனை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக தீபாவளி விற்பனை தொடக்கத்தில் மந்தம் அடைந்தாலும், இறுதிக்கட்டத்தில் எழுச்சி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களில் புத்தாடைகள், இனிப்பு வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க முடியாதவர்கள் இன்று ஒரே சமயத்தில் அங்காடிகளில் குவிந்தனர்.

விடுமுறை தினமான இன்று சென்னை தியாகராய நகர் பகுதியில் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், இனிப்பு வகைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் இன்று காலை முதல் இரவு வரை தியாகராய நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் திணறியது.

குறிப்பாக ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெருவில் எங்கு பார்த்தாலும், மனித தலைகளாகவே காட்சியளித்தது. தீபாவளியை முன்னிட்டு ஜவுளிக்கடைகள் போட்டிபோட்டு தள்ளுபடி விலை அறிவித்துள்ளதால் கூட்டம் அலைமோதியது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. பிரிஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மைக்ரோ ஓவன், டி.வி., ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை தள்ளுபடி விலையில் மக்கள் வாங்கிச்சென்றனர்.

கூட்டநெரிசலை சாதகமாக பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக தியாகராயநகர் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, பைனாக்குலர் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திருட்டு, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட பழைய குற்றவாளிகள் வந்தால், கண்காணிப்பு கேமரா உடனடியாக காட்டிக்கொடுத்தவிடும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாறுவேடத்திலும் போலீசார் மக்களோடு மக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உடைமைகளையும், நகைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

இதேபோல புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி புத்தாடைகள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் புத்தாடைகளையும், இனிப்பு வகைகளையும் ஆர்வத்தோடு வாங்கி சென்றனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

மேலும் செய்திகள்