குட்கா, லஞ்ச விவகாரத்தில் சிக்கிய 33 போலீஸ் அதிகாரிகள்

குட்கா லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்தில், 33 போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2017-10-11 22:15 GMT

சென்னை,

தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருள் விற்பனைக்கு, லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 17 அதிகாரிகள் மீது ஊழல் ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை பொருத்தமட்டில் 17 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்தில் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 33 பேர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கப்பட்ட காலமாக 2014–ல் இருந்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய 2016–ம் ஆண்டு வரை கணக்கில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் சென்னையில் போலீஸ் கமி‌ஷனர்களாக இருந்த அதிகாரிகள், வடக்கு மண்டலத்தில் அந்த நேரத்தில் உயர் பதவியை வகித்த போலீஸ் அதிகாரிகள், மாதவரம் துணை கமி‌ஷனர் சரகத்தில், அதுவும் குறிப்பாக ரெட்ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் உதவி கமி‌ஷனர்களாக பணியாற்றியவர்கள், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றியவர்கள், சப்–இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றியவர்கள் என 33 பேர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது ஒரு உதவி கமி‌ஷனர் மீதும், இன்ஸ்பெக்டர் மீதும் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் 2 பேரும் தான் நேரடியாக லஞ்சப்பணத்தைப் பெற்று மற்ற அதிகாரிகளுக்கு பங்கிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. லஞ்சப்பணம் வாங்கியதில் அவர்கள் நேரடியாக தொடர்பு வைத்திருந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்களின் பெயர் லஞ்ச ஒழிப்பு வழக்கில் இடம்பெற்றுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்தில் உள்ள 33 பேரும் கலக்கத்தில் உள்ளனர். விசாரணையில் நமக்கு பாதிப்பு வருமோ? என்று அச்சம் அவர்களிடம் உள்ளது. விசாரணை வளையத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறியதாவது:–

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய குடோன்களில் ரெட்ஹில்ஸ் போலீசாரும் 2 முறை சோதனை நடத்தினார்கள். ஆனால், அப்போது மேலிடத்தில் இருந்து இதுபோன்ற நடவடிக்கை வேண்டாம் என்ற உத்தரவு வந்தது. இதனால், நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அதற்குப்பிறகு தான் ரெட்ஹில்ஸ் பகுதியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் லஞ்சப்பணத்தை அள்ளத்தொடங்கிவிட்டனர். ஆனால், இந்த விவகாரம் இவ்வளவு பெரிய பூதாகரமாக வெடிக்கும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.  இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்