சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் 2 திருநங்கைகளுக்கு போலீஸ் வேலை

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் 2 திருநங்கைகள் போலீசாக பணியாற்றுகின்றனர்.;

Update: 2017-10-09 21:45 GMT

சென்னை,

திருநங்கையான சப்–இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினி சூளைமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று பணியில் சேர்ந்தார்.

தமிழக போலீஸ் துறையில் தற்போது திருநங்கைகள் பணி செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியாவிலேயே முதன் முதலில் பிள்ளையார்சுழி போட்டவர் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர் கடும் போராட்டம் நடத்தி கோர்ட்டில் வழக்குப்போட்டு தமிழக போலீஸ் துறையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

ஒரு வருடம் பயிற்சி முடிந்த பிறகு கடந்த வாரம் அவருக்கு சென்னை போலீசில் பணி வழங்கப்பட்டது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிரித்திகா யாஷினியை சென்னை கிழக்கு மண்டலத்தில் பணிபுரிய உத்தரவிட்டார். கிழக்கு மண்டல இணை போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் பிரித்திகா யாஷினியை சூளைமேடு சட்டம் ஒழுங்கு பிரிவில் சப்–இன்ஸ்பெக்டராக பணிநியமனம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பிரித்திகா யாஷினி முறைப்படி பணியில் சேர்ந்தார். அவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆசிபெற்றார். தமிழக போலீஸ் துறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமை பிரித்திகா யாஷினிக்கு சென்றுள்ளது.

அவர் ஏழை, எளிய மக்களுக்காக பாடுபடுவேன் என்று பெருமிதமாக நிருபர்களிடம் கூறினார். சூளைமேடு போலீஸ் நிலையத்தில் அவருக்கு சக சப்–இன்ஸ்பெக்டர்களும், போலீசாரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக போலீஸ் துறையில் முதல் திருநங்கை என்ற பெருமையை பிரித்திகா யாஷினி தான் பெற்றார் என்பது வெளிப்படையாக இருந்தாலும், சென்னை போலீசில் அதுவும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 2 திருநங்கை போலீசார் ஓசையில்லாமல் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர் என்ற விவரம் தற்போது, வெளியே வந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜாக்குலின், நாகலட்சுமி, தனுஷ் என்ற 3 திருநங்கை போலீசார் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியில் சேர்ந்தனர். அவர்களில் நாகலட்சுமி தஞ்சை மாவட்டத்திற்கு பணிமாறுதலாகி சென்றுவிட்டார்.

தற்போது ஜாக்குலினும், தனுசும் மட்டும் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு திருநங்கைக்குரிய சுபாவம் தான் உள்ளது. ஆனால், இவர்களை பெண் போலீசார் பட்டியலிலேயே வைத்துள்ளோம் என்று கமி‌ஷனர் அலுவலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் முதலில் சென்னை ஆயுதப்படை போலீசில் பணியாற்றினார்கள். அங்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தற்போது கட்டுப்பாட்டு அறையில் பிரச்சினை இல்லாமல் பணியாற்றுகிறார்கள். இவர்களோடு சக ஆண்–பெண் போலீசார் மிகவும் மரியாதையோடு பழகுகின்றனர். இவர்கள் இருவரும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் போலீசாரிடையே செல்லப்பிள்ளைகளாக வலம் வருகிறார்கள். இவர்களில் ஜாக்குலின் போலீஸ் குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார். விரைவில் வீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இவர்களைப்போல நஸ்ரியா என்ற திருநங்கையும் ராமநாதபுரம் மாவட்டத்தில், போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்