நடராஜனுக்கு உறுப்பு தானம் வழங்குவதற்காக கார்த்திக் உடலை கட்டாயப்படுத்தி கொண்டு வரவில்லை குடும்பத்தினர் தகவல்

நடராஜனுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக கார்த்திக் உடலை கட்டாயப்படுத்தி சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு வரவில்லை என்று கார்த்திக்கின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.;

Update: 2017-10-05 22:15 GMT
சென்னை,

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட ம.நடராஜனுக்கு 4-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானம் அளித்தவரின் உடல் விதிகளுக்கு புறம்பாக சென்னை கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

தானம் அளிக்கும் உறுப்புகளை மட்டும் எடுத்து வருவதற்கு பதிலாக தானம் அளிப்பவரின் உடலே தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

நடராஜனின் உறவினர் சங்கர் என்பவரிடம் இருந்து கல்லீரலின் ஒரு பகுதியும், கலாவதி என்பவரிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தையும் தானமாக பெற அனுமதி கோரப்பட்டு, அரசும் அனுமதி அளித்திருந்தது. ஆனால் அதனை தவிர்த்து அறந்தாங்கியில் விபத்தில் சிக்கியவரிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்றது போன்ற சர்ச்சைகள் எழுந்தன.

கார்த்திக்கின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்த பின்னர் அவரது பெற்றோர் நடராஜன்-பார்வதி மற்றும் குடும்பத்தினரிடம் கார்த்திக்கின் உடலை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியது. அவர்கள் சொந்த ஊரான அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலுக்கு கார்த்திக்கின் உடலை கொண்டு சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.

கார்த்திக்கின் சகோதரி பிரேமலதா கண்ணீர் மல்க கூறியதாவது:-

தஞ்சாவூர் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டபோது உடல்நிலை மோசமாக இருந்தது. டாக்டர்கள் சென்னைக்கு கொண்டு சென்றால் குணமடைய வாய்ப்பு உள்ளது என்று கூறியதால் தான் அதற்கு சம்மதித்தோம். இதற்காக சிலர் கார்த்திக்கை சென்னைக்கு கொண்டு செல்ல உதவிகள் செய்தனர். ஆனால் இங்கு வந்ததும் நிலைமை மாறிவிட்டது.

அவனுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம். அப்போது எங்களிடம் சில டாக்டர்கள் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற உடல் உறுப்புகள் தேவைப்படுவதால் கார்த்திக்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரலாம் என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் இந்த உறுப்புகள் யாருக்கு பொருத்தப்போகிறார்கள் என்ற தகவலை எங்களிடம் தெரிவிக்கவில்லை.

எனது தம்பி விபத்தில் சிக்கி இறந்துபோனாலும், அவனுடைய உறுப்புகள் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்பதில் பெருமை அடைகிறோம். உடல் உறுப்புக் காக யாரிடமும் பணம் பெறவில்லை. பணத்துக்காகவும் தானம் அளிக்கவில்லை. அதேபோல் எங்கள் குடும்பத்தினரை துன்புறுத்தியோ, கட்டாயப் படுத்தியோ கார்த்திக்கின் உடல் உறுப்புகளை யாரும் தானமாக பெறவில்லை.

எங்கள் குடும்பத்தினரின் முழு அனுமதியுடன் தான் மனப்பூர்வமாக உடல் உறுப்புகளை தானமாக அளித்து உள்ளோம். என் தம்பியின் உறுப்புகளை விற்று பிழைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்த்திக்கின் நண்பர்கள் அரபாத், அழகர் ஆகியோர் கூறும்போது, “கார்த்திக் குடும்பத்தினர் பணத்துக்காக உறுப்பு தானம் செய்யவில்லை என்றாலும், அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். திருமண வயதில் கார்த்திக்கின் சகோதரி ஒருவர் இருக்கிறார். இதற்காகவாவது தானம் பெற்றவர்கள் தாராளமாக உதவி செய்ய முன்வரவேண்டும். கார்த்திக்கின் உடலை விமானத்தில் கொண்டு சென்றது யார்? என்பது எங்களுக்கு தெரியாது” என்றனர்.

மேலும் செய்திகள்