18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: 9-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் விசாரணை வருகிற 9-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Update: 2017-10-05 00:15 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர கவர்னர் உத்தரவிட வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

அதேபோன்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த நீதிபதி துரைசாமி, ‘ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது. அதேபோன்று மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில் அந்த 2 வழக்குகளும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய விவாதம் மாலை 4 மணி வரை நடந்தது. இதன்பின்பு, 2 வழக்குகளின் விசாரணையையும் வருகிற 9-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

அதுவரை, ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும், 9-ந் தேதி அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பும் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்