பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் - டிடிவி தினகரன் பேட்டி
என் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என டிடிவி தினகரன் பேட்டியளித்து உள்ளார்.;
சென்னை,
சேலத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சிலர் தாதகாப்பட்டி உழவர் சந்தை மற்றும் சண்முகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சேலம் அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் ‘தமிழக அரசை விமர்சித்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்த டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம் உள்பட 17 பேர் என மொத்தம் 36 பேர் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன், புகழேந்தி உள்பட 31 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்களை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என டிடிவி தினகரன் பேட்டியளித்து உள்ளார்.
சென்னையில் டிடிவி தினகரன் பேட்டியளித்து பேசுகையில், என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்கள் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். தேச துரோக வழக்கு போடும் அளவிற்கு எந்த புகாரும் கிடையாது. பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா விரைவில் பரோல் கிடைக்கப்பெற்று வெளியில் வருவார் என்றார்.
தேச துரோக வழக்கை வலிமையாக எதிர்கொள்வேன், முன் ஜாமீன் கேட்க மாட்டேன், துண்டு பிரசுரத்தில் கடுமையான வார்த்தைகள் எதுவும் இல்லை என்பதே சட்டவல்லுநர்களின் கருத்து எனவும் குறிப்பிட்டு உள்ளார்.