தண்டனை காலத்துக்கு முன்பே தமிழக சிறைகளில் உள்ள 776 கைதிகள் விடுதலை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
தண்டனை காலத்துக்கு முன்பே தமிழக சிறைகளில் உள்ள 776 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
திருச்சி
திருச்சி மத்திய சிறையில் உணவகத்தை திறந்துவைத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:–
14 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை ஆலோசனைக் குழுவின் முடிவின்படி தான் விடுதலை செய்ய முடியும். இந்த குழு பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். தற்போது இந்த குழுவில் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கான பணி தொடங்கி இருக்கிறது.
இதுதவிர, குறுகியகால தண்டனை, நீண்டகால தண்டனை பெற்றவர்கள் அவர்களது தண்டனை காலம் முடிவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம். அந்த வகையில் இந்த ஆண்டு தகுதியான அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் மொத்தம் 776 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.