தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு தாவிய தென்காசி தொகுதி எம்.பி

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து அந்த கட்சியின் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அணியில் பலரும், தினகரன் அணியில் சிலரும் இருக்கிறார்கள்.;

Update:2017-09-22 13:06 IST
சென்னை,

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.பி.க்களில் வசந்திமுருகேசனும் ஒருவர். தென்காசி தொகுதி எம்.பி. யான இவர் அணிகள் பிரிந்தது முதல் தினகரன் அணியிலேயே இருந்தார்.

இந்த நிலையில் வசந்தி முருகேசன் எம்.பி. தினகரன் அணியில் இருந்து இன்று வெளியேறினார்.  காலையில் முதல்-அமைச்சர் பழனி சாமி வீட்டுக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசினார்.

அணிமாறியது குறித்து வசந்தி முருகேசன் கூறியதாவது:-

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட கட்சி அ.தி.மு-க. இந்த கட்சியை டி.டி.வி.தினகரன் பெரிய கட்சியாக வளர்ப்பார் என்று அவர் பின்னால் சென்றேன். ஆனால் அவர் தி.மு.க.வுடன் சேர்ந்து கட்சியை அழிக்கப் பார்க்கிறார். அதிமுக ஆட்சியை அகற்றுவேன் என்கிறார் தினகரன்

இந்த கட்சியும், ஆட்சியும் எனக்குப்பிறகும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறார்கள். 

கட்சியையும், கொடியையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே நான் அவர்கள் இருவரையும் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். இந்த அரசு ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. எனது தொகுதி மக்களுக்கும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க பாடுபட்டு வருவேன்.  இவ்வாறு அவர் கூறினார். 

வசந்தி முருகேசன் அணி மாறியதால் தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்