மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா: 1½ லட்சம் பக்தர்கள் நீராடினர்
காவிரி மகாபுஷ்கர விழாவையொட்டி மயிலாடுதுறை துலா கட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.;
மயிலாடுதுறை,
இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதை, காவிரி உள்ளிட்ட 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசித்துள்ளதால், துலாம் ராசிக்குரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு புஷ்கர விழா, காவிரியில் 144 ஆண்டுகளுக்குப்பிறகு வருவதால் மகா புஷ்கர விழா என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி காவிரி உற்பத்தியாகும் குடகுமலை முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரையிலும் உள்ள முக்கிய இடங்களில் விழா கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.
வெளிமாநில பக்தர்கள்
விழாவின் முதல் நாளில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீனங்கள், மடாதிபதிகள் புனித நீராடி விழாவை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இந்த விழாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களும் நடைபெற்று வருகின்றன.
5-ம் நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை துலாகட்டத்திற்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினர்.
மேலும் அங்கு நடைபெற்ற நோய்கள் நீக்கும் மகா சுதர்ஷன யாகத்திலும் அவர்கள் பங்கேற்றனர். பின்னர் அன்னபூர்ணேஸ்வரர்- அன்னபூர்ணேஸ்வரிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காவிரி ஆற்றின் தென்கரையில் அரசமரத்தடியில் உள்ள காவிரி தாய்க்கு பாலாபிஷேகமும் நடந்தது.
எடப்பாடி பழனிசாமி
காவிரி மகாபுஷ்கர விழாவுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்து அங்கிருந்து காவிரியில் பாய்ந்து ஓடுகிறது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20-ந்தேதி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடுவார் எனவும், பின்னர் அவர் நாகை புறப்பட்டு செல்வதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
1½ லட்சம் பேர் புனித நீராடினர்
மகாபுஷ்கர விழா தொடங்கிய 12-ந்தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் மட்டும் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் புனித நீராட வரும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி நாகை மாவட்டத்துக்கு வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.