வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவு
வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தொடக்க கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தார்.
சென்னை,
பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோவன் ஆகியோர் தலைமையில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தலைமையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகிறார்கள். ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த பல சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை.
தற்காலிக பணிநீக்கம்
தமிழகத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பள்ளிகளுக்கு சில ஆசிரியர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு 17ஏ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 17ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டால் ஊக்கத்தொகை, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்காது. 11-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யலாம்.
இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், உதவி கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வருகிறார்கள்.
பள்ளிகள் செயல்படும்
பள்ளிகளுக்கு பல ஆசிரியர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவில்லை என்றாலும் பள்ளிகள் செயல்படுகின்றன. அந்த பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அனைத்து பள்ளிகளும் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.