தினகரன் அணியில் இருந்து 9 எம்.எல்.ஏக்கள் முதல்வரை தொடர்புகொண்டு ஆதரவு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தினகரன் அணியில் இருந்து 9 எம்.எல்.ஏக்கள் முதல்வரை தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்து உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
அ.தி.மு.க. தலைமை கழகத் தில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
10.45 மணிக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனி சாமி வந்தார் அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.
109 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மட்டும் கூட்டத்துக்கு வர வில்லை என்று கூறப்பட்டது. கூட்டத்தில் முதல் -அமைசர் மீது நம்பிக்கை உள்ளது. அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டத்தில் 111 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர் . அமைச்சர் ஜெயக்குமார் பேராவூரணி எம்.எல்.ஏ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை என கடிதம் அளித்தார். 2 எம்.எல்.ஏக்கள் மட்டும் கூட்டத்திற்கு வரவில்லை.
சட்ட விரோதமாகவும், எம்.எல்.ஏக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது . அரசுக்கு முழு ஆதரவு வழங்குவோம் என விடுதியில் தங்கியுள்ள தினகரன் அணியில் இருந்து 9 எம்.எல்.ஏக்கள் முதல்வரை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
துரோகம் செய்யும் எம்.எல்.ஏக்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அதிமுக அரசுக்கு துரோகம் செய்யும் எம்.எல்.ஏக்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.