அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது அரசியல் சூழ்ச்சி தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
மோடியை விமர்சிப்பது வேதனையானது, அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது அரசியல் சூழ்ச்சி என தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், மாணவி அனிதாவை இழந்தது மிகப்பெரிய துயரம். வேதனையானது. எந்தவகையிலும் ஈடுசெய்ய முடியாதது. வறுமையுடன் போராடி சாதித்த அந்த குழந்தையை நீட் தேர்வு போராட்டத்துக்காக டெல்லிவரை அழைத்து சென்று இருக்கிறார்கள். இந்த பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது ஒரு வேளை நீட் தேர்வில் மருத்துவம் கிடைக்காமல் போனால் விவசாயம் படிப்பேன் என்று சொன்னார். துணிச்சம் தைரியமும் நிறைந்த அந்த குழந்தை திடீரென்று மனம் மாறி தற்கொலை செய்து கொண்டது எப்படி? அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? இதன் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.
எல்லோரையும் வாழ வைக்க பாதுகாக்கத்தான் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் தங்கள் அரசியல் பிழைப்புக்காக மோடி எதுவும் செய்யவில்லை. பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்ற நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாக விதைத்து வரும் இந்த அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்கப்படும். உரிக்கப்படும். அனிதாவின் மரணத்தை வைத்து சூது அரசியல் நடத்துகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை செய்து வரும் மோடியை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.
துடைப்பத்தாலும், செருப்பாலும் அடித்து அவமானப்படுத்தும் கீழ்த்தரமான அரசியல் வாதிகளை இனியும் பொறுக்க மாட்டோம். நல்லது செய்துவிட்டு அவமானப்பட வேண்டிய அவசியமில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மக்களை ஏமாற்றி சாதி அரசியல் செய்வது யார் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வோம். சமதர்மம் என்று சொல்லி அதர்ம அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக பா.ஜனதாவின் தர்மயுத்தம் தொடங்கிவிட்டது என்றார்.