பூலித்தேவன் விழாவில் மோதல் : கருணாஸ் மீது வழக்குப்பதிவு

நெற்கட்டும் செவலில், பூலித்தேவன் விழாவில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கருணாஸ் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2017-09-02 23:02 GMT
நெல்லை

நெற்கட்டும் செவலில், பூலித்தேவன் விழாவில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கருணாஸ் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திடீர் மோதல்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் நேற்று முன்தினம் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் நெற்கட்டும் செவலுக்கு வந்தார். பூலித்தேவன் சிலைக்கு ஆதரவாளர்களுடன் மாலை அணிவிக்க சென்றபோது, தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.

திடீரென்று இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதில் கருணாஸ் எம்.எல்.ஏ. வந்த காரை ஒரு தரப்பினர் கைகளால் தாக்கியும், கல் வீசியும் உடைத்தனர். இதே போல் கருணாஸ் ஆதரவாளர்கள், முத்தையா தேவர் வந்த காரை கல்வீசி தாக்கி உடைத்தனர்.

கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் பேரில் கருணாஸ் எம்.எல்.ஏ. உள்பட இரு தரப்பினரையும் சேர்ந்த 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்