அசல் ஓட்டுனர் உரிமம்: உத்தரவை 5-ந் தேதி வரை அமல்படுத்த கூடாது - ஐகோர்ட்டு

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை 5-ந் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-09-01 22:56 GMT
சென்னை

ரத்துசெய்ய வேண்டும்

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். தவறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது’ என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த மனுவில், ‘அரசு உத்தரவால் ஓட்டுனர்களின் ஆவணங்கள் எதுவும் லாரி உரிமையாளர்களிடம் இருக்காது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பு வரும். லாரிகளை திருடுவது, கடத்துவது போன்ற சம்பவங்களும் நடக்கும். எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

பொதுநல வழக்கு

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையுடன் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘அந்த பொதுநல வழக்கு டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்களின் அசல் ஓட்டுனர் உரிமத்தை உத்தரவாத பொருளாக லாரி உரிமையாளர்கள் வைத்துக்கொள்வதை ஏற்கமுடியாது’ என்று கூறினார்.

அப்போது மனுதாரர் வக்கீல் குறுக்கிட்டு, ‘அரசு என்ன செய்கிறது? போக்குவரத்து கழகங்களில் பணிக்கு சேரும் ஓட்டுனர்களின் அசல் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக்கொள்கிறது. அரசும் அதே நடைமுறையை தான் கடைபிடிக்கிறது’ என்றார்.

சிரமத்தை ஏற்படுத்தும்

இதன்பின்னர் அட்வகேட் ஜெனரல், ‘நாட்டிலேயே அதிக விபத்து நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. போக்குவரத்து விதிகளின்படி, அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கு நீதிபதி, ‘மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களும் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றால், அது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். உரிமம் தொலைந்துவிட்டால், மற்றொரு உரிமம் வாங்கும் வரை சம்பந்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டமுடியாத நிலை ஏற்படும்?’ என்று கருத்து தெரிவித்தார்.

வாங்க முடியாதா?

இதற்கு அட்வகேட் ஜெனரல், ‘ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ் இரண்டையும் சேர்த்து வழங்கும் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட்டு நீக்கியுள்ளது. அதனால் அந்த திட்டம் வந்துவிட்டால் இன்னும் எளிதாகிவிடும். ஓட்டுனர் உரிமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பல வழிகள் உள்ளன’ என்றார்.

‘ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மோட்டார் வாகனங்களை வாங்க முடியாது என்று மற்றொரு உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. அப்படி என்றால், ஒரு பெண் கனரக வாகனங்களான பஸ், லாரி போன்றவற்றை வாங்க முடியாதா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சாத்தியம் இல்லை

பின்னர், ‘அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு சாத்தியம் இல்லாதது. பெரும்பான்மையான மக்களிடம் ‘ஸ்மார்ட் போன்’ வந்துவிட்டது. அந்த போனில் செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்துவிட்டால், வாகன ஓட்டிகள் அதை காண்பித்து செல்வார்கள். இப்போது எல்லாம் கணினி மயமாகிவிட்ட நிலையில், பழைய நிலைக்கே ஏன் செல்ல வேணடும்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அட்வகேட் ஜெனரல், ‘அசல் உரிமம் குறித்து பொதுநல வழக்கு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கையும், அந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க டிவிசன் பெஞ்சுக்கு பரிந்துரை செய்யவேண்டும். அதுவரை அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு அமல்படுத்தாது என்று உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்றார்.

5-ந் தேதி வரை...

பின்னர் நீதிபதி எம்.துரைசாமி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள், வருகிற 4-ந் தேதி ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது. எனவே வருகிற 5-ந் தேதி வரை அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறேன். இந்த வழக்கை டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன்.

மேலும் செய்திகள்