வாலிபர்களின் ‘ஈவ் டீசிங்’ தொல்லையை தாங்க முடியாமல் சென்னை ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் கீழே குதித்தார்

வாலிபர்களின் ‘ஈவ் டீசிங்’ தொல்லையை தாங்க முடியாமல் சென்னை ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் கீழே குதித்தார்

Update: 2017-08-31 22:00 GMT
விஜயவாடா,

வடமாநில வாலிபர்களின் ‘ஈவ் டீசிங்’ தொல்லை தாங்க முடியாமல், ஓடும் ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் கீழே குதித்தார். தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை சென்டிரலில் இருந்து நிஜாமுதினுக்கு மில்லினியம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அதில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக, மூன்று பெண் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஏறினர். எஸ்1 பெட்டியில் அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

அந்த பெட்டியில், வட இந்தியாவை சேர்ந்த, இந்தி பேசும் 3 வாலிபர்களும் பயணம் செய்தனர்.

அந்த வாலிபர்கள், 3 பெண் என்ஜினீயர்களையும் ‘ஈவ் டீசிங்’ செய்யத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல அவர்களின் அணுகுமுறை மோசம் அடைந்தது.

அவர்களின் தொந்தரவு அதிகரித்தது. இருப்பினும், அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள், பெண் என்ஜினீயர்களை மீட்க முன்வரவில்லை. இதனால், 3 பெண்களும் செய்வது அறியாமல் திகைத்தனர்.

ஒரு கட்டத்தில், ‘ஈவ் டீசிங்’ தொல்லையை தாங்க முடியாமலும், தப்பிக்கும் முயற்சியாகவும், 22 வயதான ஒரு பெண் என்ஜினீயர், ஓடும் ரெயிலில் இருந்து குதித்து விட்டார். அப்போது ரெயில் ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது.

தங்கள் தோழி கீழே குதித்ததை பார்த்தவுடன், மற்ற 2 பெண் என்ஜினீயர்களும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

கீழே விழுந்து கிடந்த பெண் என்ஜினீயர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ‘ஈவ் டீசிங்’கில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்