டிடிவி தினகரனுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் ஆதரவு, ஆதரவு எண்ணிக்கை 22 ஆனது
டிடிவி தினகரனுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்டு நின்ற அ.தி.மு.க. 7 மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து இருக்கிறது. அதன் பயனாக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்-அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, அ.தி.மு.க.வில் இருந்து விரைவில் சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் நீக்க முடிவு செய்யப்பட்டது. இதனை வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
இதனால், வெகுண்டெழுந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னர் வித்யா சாகர் ராவை கடந்த 22-ந் தேதி நேரில் சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதன்பின் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தவிர மற்ற 18 பேர் கடந்த 22–ந்தேதி புதுவை சென்று சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். இந்தநிலையில் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர். அவர்களும் புதுச்சேரி சென்று உள்ளனர். இதனையடுத்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எம்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது தேனியில் டிடிவி தினகரனை சந்தித்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஆதரவு தெரிவித்து உள்ளார். பழனிசாமியை முதல்-அமைச்சராக்கியது சசிகலாதான். சசிகலாவை தள்ளிவைத்துவிட்டு ஆட்சி செய்ய முடியாது. ஓ. பன்னீர் செல்வம் அணியை எனக்கு பிடிக்காது என கூறிஉள்ளார் போஸ். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது.
இம்மாத தொடக்கத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் விவசாய பிரிவு இணைச் செயலாளராக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்டார். அப்போது தினகரன் கட்சி பதவி வழங்கியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஏ.கே.போஸ். எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார். எனவே அவர்தான் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.