மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தல்: விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் சிக்கியது
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.;
ஆலந்தூர்,
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்தியவரையும், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் திருச்சியை சேர்ந்த பக்ரூதீன் (வயது 51) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்து இருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை என்பதால் அவரை வெளியே அனுப்பிவிட்டனர்.
ஆனால் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அவர் விமான நிலையத்தில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு அதன் பிறகு வெளியே செல்ல முயன்றார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை மீண்டும் அழைத்துவந்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்த உடைமைகளில் கருப்பு நிற பொட்டலம் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 18 தங்க கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
முதலில் சோதனை செய்தபோது இல்லாத தங்கம் பின்னர் எப்படி வந்தது? என குழம்பிய அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பக்ரூதீன் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வரும்போது குடியுரிமை சோதனைக்கு முன்னர் விமான நிலைய தற்காலிக ஊழியர் மணிகண்டன் (31) என்பவரிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்துவிட்டு வருகிறார்.
குடியுரிமை சோதனை முடிந்து பக்ரூதீன் வெளியே வந்ததும் அந்த பொட்டலத்தை மணிகண்டன் மீண்டும் அவரிடம் தருவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து தங்கம் கடத்திவந்த பக்ரூதீன் மற்றும் அவருக்கு உதவிய விமான நிலைய தற்காலிக ஊழியர் மணிகண்டன் இருவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
மணிகண்டன், இதேபோல் தங்கம் கடத்தலுக்கு மேலும் பலருக்கு உதவியுள்ளாரா? வேறு ஊழியர்கள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? பக்ரூதீனுக்கு சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.