பிரதமரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-08-09 20:26 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புக்கான அனைத்து மாணவர் சேர்க்கையையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிக்காவிட்டால் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் காலியிடங்கள் என அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் அறிவித்துள்ளன.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நீட் தொடர்பான இன்னொரு வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று இம்மாதத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்யாவிட்டால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும் காலியிடங்களாக அறிவிக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்த நெருக்கடியை சமாளித்து, மாணவர்களின் நலன்களை எவ்வாறு காப்பாற்றப்போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கோ அல்லது ஓராண்டுக்கான தற்காலிக அவசரச் சட்டத்திற்கோ மத்திய அரசின் ஒப்புதலை வழங்கும்படி வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க உச்சநீதிமன்ற அனுமதியையும் பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்