தமிழகத்தில் புதிய ஜவுளி கொள்கை உருவாக்கப்படும்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை உருவாக்கப்படும் என்று சென்னையில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.;

Update: 2017-08-07 21:45 GMT

சென்னை,

3–வது தேசிய கைத்தறி தின விழா தமிழக அரசு சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறந்த நெசவாளர்கள், கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:–

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் வேட்டி சேலை பெற்றிடும் வகையிலும், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும், 54 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

வரும் ஆண்டு பொங்கலுக்கு 3 கோடியே 36 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்க இருக்கிறோம். அரசுத் திட்டங்களான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தும் முகமை நிறுவனமாக ‘கோ–ஆப்டெக்ஸ்’ செயல்பட்டு வருகிறது.

கைத்தறித்துறைக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்திய காரணத்தினால் தான் 1,156 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 964 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. ஜெயலலிதாவின் வழியில் வந்த ஆட்சியில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ‘கோ ஆப்டெக்ஸ்’ நிறுவனத்தை ரூ.2 கோடியில் நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஜவுளி பிரிவிற்கு சிறப்பு கவனம் செலுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ‘அஹிம்சா’ ரக பட்டுகள் கோ–ஆப்டெக்சில் அறிமுகப்படுத்தப்படும். இயற்கை சாயமிடப்பட்ட பருத்தி சேலை ரகங்கள், திண்டுக்கல், கோவை வதம்பசேரி, திருச்சி மணமேடு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எழுத்தாளர்கள் இந்த நாட்டுக்கு எத்தனை முக்கியமோ அதைப்போன்று நெசவாளர்கள் இந்த நாட்டுக்கு மிக மிக முக்கியம். எனவே தமிழகத்தில் நெசவு தொழிலுக்காக ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும். கைத்தறி உடுத்துவோம். காந்திய வழியில் நடப்போம். கைத்தறி தொழிலாளர்களுக்கு உதவுவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும்போது, ‘கைத்தறி ஆடைகள் மீதான 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார் சிறப்புரை ஆற்றினார். தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.

கைத்தறித்துறை அரசு முதன்மை செயலாளர் க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார்.

விழாவில் சிறந்த கைத்தறி ஏற்றுமதி விருது கோ–ஆப்டெக்சுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை கோ–ஆப்டேக்ஸ் மேலாண்மை இயக்குனர் டி.என்.வெங்கடேஷ் பெற்றார். சிறந்த கைத்தறி நெசவாளர் விருது திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எம்.ஆர்.ராஜசேகரனுக்கு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்